புதிய சிறைச்சாலை சட்டம்: மின்னணு கண்காணிப்பு சாதனங்கள், திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகள்!
உள்துறை அமைச்சகம், சமீபத்தில், திருத்தப்பட்ட சிறைச்சாலைகள் சட்டம் 2023 என்ற திட்டத்தை பரிந்துரைத்துள்ளது. அந்த திருத்தப்பட்ட சட்டத்தில், சிறையில் இருக்கும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு விதிகளும் உள்ளன. நாடு சுதந்திரம் அடையும் முன் இயற்றப்பட்ட பழைய சட்டம், குற்றவாளிகளை பிடிப்பதிலும், சிறைகளில் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. கடந்த ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறினார். ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த விதிகள் சரியில்லை என்று நினைப்பதாகவும் கூறினார். கைதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, தண்டனைகளை நிறைவேற்றுவது, சிறையில் ஏதேனும் தவறு நடந்தால், கைதிகள் புகார் செய்வது போன்ற விதிகள் தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய சிறைச்சாலை சட்டம்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறைகளை நிர்வகிப்பது, பரோலில் வெளியே வரும் கைதிகளை கண்கணிக்க ட்ரெக்கிங் சிஸ்டம், திருநங்கைகளுக்கென தனி அறைகள் போன்றவை இந்த புதிய சிறைச்சட்டத்தில் உள்ளது. தற்போது சிறைச்சாலைகள் என்பது பழிவாங்கும் இடங்களாகப் பார்க்கப்படாமல், சீர்திருத்த நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. அங்கு கைதிகள் மாற்ற ஒரு வாய்ப்பாகவும், சிறையை விட்டு வெளி வந்த பின்பு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது . 1894-ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் சட்டத்துடன், 1900-ஆம் ஆண்டின் கைதிகள் சட்டம் மற்றும் கைதிகள் இடமாற்றச் சட்டம்(1950) ஆகியவை MHA ஆல் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சட்டங்களின் தொடர்புடைய விதிகள், மாதிரி சிறைச்சாலைகள் சட்டம், 2023 இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.