லட்சத்தீவுக்கு நகர்ந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை, இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இரு தினங்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில் இன்னும் இரு தினங்களில் அதாவது வரும் நவம்பர் 22-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, நவம்பர் 23 முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.