ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தி; இந்தியா கொண்டுவர பிரதமர் மோடிக்கு நேதாஜியின் பேரன் கடிதம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திர குமார் போஸ், ஜப்பானில் உள்ள ரெங்கோஜி கோவிலில் உள்ள தனது தாத்தாவின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சந்திர குமார் போஸ் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு நாளான ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு முன்னதாக, நேதாஜியின் அஸ்தியை ரெங்கோஜியில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டுவருமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார். அவர் மேலும், "அவரது காந்த ஆளுமை, புத்திசாலித்தனம், அசாதாரண தைரியம், தன்னலமற்ற தன்மை மற்றும் இந்திய சுதந்திரத்திற்கான தளராத அர்ப்பணிப்பு ஆகியவை சுதந்திரத்தை விரும்பும் மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் அவரை நாயகனாக ஆக்கியுள்ளன." என்று மேலும் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறப்பின் பின்னணி
ஆகஸ்ட் 1945இல் ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் இராணுவ விமானத்தில் தைவானிலிருந்து புறப்படும்போது விமான விபத்தில் அவர் (நேதாஜி) இறந்ததாக கருதப்பட்டது. அதேநேரம், போராட்டத்தைத் தொடர சோவியத் யூனியனுக்குச் செல்வதற்காக, இருந்ததுபோல் நாடகத்தை நடத்தி இருக்கலாம் என்றும் ஒருபுறம் சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசாங்கம் 1956இல் ஐஎன்ஏ மூத்த ஜெனரல் ஷா நவாஸ் கான் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை இதற்காக அமைத்த நிலையில், நேதாஜி 1945 விமான விபத்தில் இறந்ததை அவர்கள் உறுதிப்படுத்தினர். எனினும், தொடர்ந்து அவரது மரணம் குறித்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில், நேதாஜி தொடர்பான கோப்புகளை பொதுவெளியில் வைத்து மோடி தலைமையிலான அரசு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.