குழந்தைகளின் உணவில் சர்க்கரையைக் குறைத்து வருவதாக நெஸ்லே இந்தியா பதில்
இந்தியா: செர்லாக் மற்றும் நீடோ பிராண்டுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க்கப்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்ததது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, குழந்தை உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு WHO வழிகாட்டுதல்களின் படி உள்ளதா என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நெஸ்லே இந்தியா பதிலளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குழந்தை பொருட்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள சர்க்கரைகளின் அளவு பொருட்களின் மாறுபாட்டை பொறுத்து 30 சதவீதம் வரைகுறைக்கப்பட்டுள்ளதாக நெஸ்லே இந்தியா தெரிவித்துள்ளது. சுவிஸ் புலனாய்வு அமைப்பான பப்ளிக் ஐ சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் மூலம், நெஸ்லேவின் முன்னணி குழந்தை உணவு பிராண்டுகளான செர்லாக் மற்றும் நீடோவில்அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு முரணான நெஸ்லேவின் சர்க்கரை அளவு
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் விளம்பரப்படுத்தப்படும் நெஸ்லேயின் பிராண்டுகளில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகம் காணப்பட்டது என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு இது முரணானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து செர்லாக் தயரிப்புகளிலும், ஒரு கிண்ணத்திற்கு சராசரியாக கிட்டத்தட்ட 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் செர்லாக் தயரிப்புகளின் விற்பனை 250 மில்லியன் டாலர்களைத் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வை தொடர்ந்து, நெஸ்லேவின் செர்லாக் சர்ச்சையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(எஃப்எஸ்எஸ்ஏஐ) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.