சென்னையில் போக்குவரத்து சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி
தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறை 400 ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்து, சென்னை, கும்பகோணம், திருச்சி போன்ற 12 மாவட்டங்களின் பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் மட்டுமே பல்லவன் சாலை, கோயம்பேடு போன்ற ஒவ்வொரு பணிமனையிலும் நாள் ஒன்றுக்கு 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்பட இருந்தனர். இந்நிலையில், அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் ஒப்பந்தத்தை கோரலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்ததையடுத்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில்சங்க பிரதிநிதிகளோடு ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை
அப்போது இது குறித்து முதல்வருடன் பேசி முடிவெடுக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதையடுத்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், ஊழியர் சங்கங்கள் உள்ளிட்டோர் இடையே இன்று(மே.,31) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து, சென்னையில் மீண்டும் போக்குவரத்து தொழில்சங்க பிரதிநிதிகளோடு ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறையில் ஊழியர்களை வெளி ஏஜென்சிகள் மூலம் நியமிக்கப்படும் திட்டம் தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து துறை உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.