நீட் 2026 விவகாரம்: ஜே.பி. நட்டாவுடன் CJP நடத்திய பேச்சுவார்த்தையின் 3 முக்கிய கோரிக்கைகள்
செய்தி முன்னோட்டம்
நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் Cockroach Janta Party பிரதிநிதிகள், இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து தங்களது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதை ஒட்டி, ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் 'சலோ சன்சாத்' பேரணியை CJP நடத்தியது. நாடாளுமன்ற வீதி அருகே போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட டெல்லி போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி முன்னேற முயன்றதால், போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
பேச்சுவார்த்தை
ஜே.பி. நட்டா - சிஜேபி பேச்சுவார்த்தை
டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, சமரசம் பேச முன்வந்த மத்திய அரசு தரப்பில், அமைச்சர் ஜே.பி. நட்டாவை சிஜேபி பிரதிநிதிகள் சந்தித்தனர்.
முற்பகல் 11:50 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை, மாலை 4 மணி வரை நீடித்தது.
இந்த சூழலுக்கு மத்தியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சுமார் மூன்றரை மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
கோரிக்கைகள்
CJP மனுவில் உள்ள 3 முக்கிய கோரிக்கைகள்
சிஜேபி அமைப்பின் முக்கிய முகங்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் சமர்ப்பித்த மனுவில்:
நீட் முறைகேட்டைக் கண்டித்து 23 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை மோசமடைந்ததால், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தளம் முடக்கம் மற்றும் சியுஇடி தேர்வு தாமதம் போன்ற தொடர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.