மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் மோத தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்து மூன்றாவது வேலை நாள் இன்று தொடங்கி இருக்கும் நிலையில், பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர். மேலும், மணிப்பூரில் அதிகரித்து வரும் கொடூரமான குற்றங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கூடியுள்ளனர். அதே நேரத்தில், மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சிக் கூட்டணியான INDIAவைச் சேர்ந்த எம்.பி.க்களும் காந்தி சிலை அருகே திரண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவார் என்று பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளை எதிர்த்து, பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றன. இதனால், ஜூலை 20ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும், இரு அவைகளிலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், அரசாங்கம் "குறுகிய கால விவாதத்திற்கு" மட்டுமே இதுவரை ஒப்புக் கொண்டுள்ளது.