பாடபுத்தகங்களில், 'இந்தியா'-வை 'பாரத்' என மாற்ற NCERT குழு பரிந்துரை
பள்ளி பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என்று மாற்றவும், ' பழங்கால வரலாறு' என்பதற்கு பதிலாக 'கிளாசிக்கல் ஹிஸ்டரி'யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. ஏழு பேர் கொண்ட இந்த குழு அளித்த ஒருமித்த பரிந்துரைப்படி, மேலும் சில மாறுதல்களுடன், புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்படும் என NCERT தலைவர் ஐசக் தெரிவித்தார். "பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு, 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று ஐசக் மேலும் கூறினார்.
"ஆங்கிலேயர்களால் பெயர்மாற்றம் அடைந்தது பாரதம்": ஐசக்
"இந்தியா என்ற சொல் முதன் முதலில் கிழக்கிந்திய கம்பெனியினரால் நிறுவப்பட்டது. அதோடு, 1757 பிந்தைய ஆண்டுகளில், ஃபிளாசி போருக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது," என்று NCERT தலைவர் மேலும் கூறினார். எனவே, அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் 'பாரத்' என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று NCERT குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது என்றார் ஐசக்.
ஜி 20 மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'பாரத்'
'பாரத்' என்ற பெயர் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக தோன்றியது, ஜி 20 மாநாட்டில் தான். அதில் ஜனாதிபதியின் விருந்திற்கான அரசு அழைப்பிதழ்களில் 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பிரசிடென்ட் ஆஃப் பாரத்' என்ற பெயரிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அதன் தொடர்ச்சியாக, ஜி 20 உச்சி மாநாட்டின் போது, உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்ப் பலகையிலும், இந்தியாவுக்குப் பதிலாக 'பாரத்' என்று எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
பழம்பெரும் இந்தியாவின் பெருமையை இளம்தலைமுறையினருக்கு படிப்பிக்க வேண்டும்
ஐசக் மேலும், "ஆங்கிலேயர்கள் வகுத்த இந்திய வரலாறு, இந்தியாவை இருளில் காட்டியது. நாம் அடைந்திருந்த அறிவியல் முன்னேற்றம் பற்றி இளம்தலைமுறையினருக்கு மறைக்கப்பட்டது. உதாரணமாக, ஆர்யபட்டாவின் வானிலை ஆராய்ச்சிகள் பற்றி இன்றைய பள்ளி குழந்தைகளுக்கு தெரியாமலே போய்விட்டது. இந்த நிலைமையை மாற்றவே, புது சரித்திர பாடம் அறிமுகம் செய்ய குழு பரிந்துரைத்துள்ளது" அதோடு, முகலாயர்களை எதிர்த்து, பாரத தேச மன்னர்கள் அடைந்த வெற்றிகள் பற்றியும் குறிப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். "நமது தோல்விகள் பற்றி மட்டுமே தற்போது பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் மீது நாம் பெற்ற வெற்றிகள் மறைக்கப்பட்டுள்ளன" என ஐசக் கூறினார். தவிர, அனைத்து பாடங்களின் பாடத்திட்டத்திலும் இந்திய அறிவு முறையை (IKS) அறிமுகப்படுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.