Loading...
பள்ளி மாணவர்களுக்கு ஏஐ மற்றும் கணக்கீட்டு சிந்தனை: புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது NCERT
புதிய ஏஐ பாடத்திட்டம் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கு ஏஐ மற்றும் கணக்கீட்டு சிந்தனை: புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது NCERT

எழுதியவர் Sekar Chinnappan
Oct 25, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT), 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்காக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டு சிந்தனை (Computational Thinking) குறித்த புதிய அறிமுகப் பாடத்தொகுப்பை உருவாக்கியுள்ளது. வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் பொறுப்பான டிஜிட்டல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே வளர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இணங்க இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனுபவக் கல்வி

செயல்பாடுகள் சார்ந்த அனுபவ வழிக் கற்றல் முறை அறிமுகம்

இப்புதிய பாடத்தொகுதி வெறும் தத்துவார்த்தக் கற்றலாக (Theoretical Instruction) இல்லாமல், விவாதங்கள், நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் சோதனைகள் உள்ளடக்கிய செயல்பாடுகள் சார்ந்த கற்றல் முறையைப் பின்பற்றுகிறது.

கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் உள்ள பள்ளிகள் மட்டுமின்றி, வசதிகள் குறைவான கிராமப்புறப் பள்ளிகளிலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பள்ளி மாணவர்களின் விமர்சன சிந்தனை (Critical Thinking), படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்கள் கணிசமாக அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

தரவு பாதுகாப்பு

தரவு பாதுகாப்பு, போலிச் செய்திகள் மற்றும் தொழில்நுட்ப நெறிமுறைகள்

செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவது இப்பாடத்திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாகும்.

ஏஐ கருவிகள் வழங்கும் பதில்களை கண்மூடித்தனமாக ஏற்காமல், தகவல்களின் உண்மைத்தன்மையை மாணவர்கள் சுய சிந்தனையுடன் சரிபார்க்க இதில் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

மேலும், இணைய தரவு பாதுகாப்பு, போலிச் செய்திகளை அடையாளம் காணுதல் மற்றும் ஏஐ தொழில்நுட்ப உருவாக்கத்தில் உள்ள மனித நெறிமுறைகள் குறித்து மாணவர்களுக்குத் விரிவாகக் கற்பிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

முன்னுரிமை

மனித சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனுக்கு முன்னுரிமை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் அதே வேளையில், மனிதனின் சுய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதில் NCERT உறுதியாக உள்ளது.

தொழில்நுட்பக் கருவிகள் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், மனிதனின் பகுத்தறிவு மற்றும் நெறிமுறைப் பொறுப்பே முதன்மையானது என்பதை இத்தொகுதி வலியுறுத்துகிறது.

மாறும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப இந்திய மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் NCERT எடுத்துள்ள இந்த நடவடிக்கை கல்வியாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT