தேர்தலில் தோற்றதை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ராஜினாமா
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த பின்னர், ஒடிசா முதல்வரும் பிஜேடி தலைவருமான நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் இன்று புவனேஷ்வரில் உள்ள ராஜ்பவனில் தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ரகுபர் தாஸிடம் அளித்தார். 1997 முதல், பிஜு ஜனதா தளம் ஒடிசாவில் 27 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் பாஜகவுக்கு பெரும் வெற்றி
இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியிடம் (பாஜக) அக்கட்சி தோல்வியடைந்தது. 147 இடங்களைக் கொண்ட ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பிஜேடி கட்சியால் 51 இடங்களை மட்டுமே பெற முடிந்ததால் அக்கட்சி தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து ஒடிசாவில் காங்கிரஸ் 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் நடந்த மக்களவை தேர்தலிலும் பாஜக சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் இருந்த 21 மக்களவை தொகுதிகளுள், 20 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.