Loading...
இந்திய ராணுவத்திற்குப் பெருமை! நேட்டோ அறிக்கையில் 10 இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஆய்வு
நேட்டோ அறிக்கையில் 10 இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஆய்வு

இந்திய ராணுவத்திற்குப் பெருமை! நேட்டோ அறிக்கையில் 10 இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஆய்வு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
03:36 pm

செய்தி முன்னோட்டம்

நவீன போர்க்களங்கள் வெறும் ஆயுத மோதல்களைத் தாண்டி எவ்வாறு தகவல்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு மாறியுள்ளன என்பது குறித்து இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் எழுதிய ஆய்வுக் கட்டுரை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா மற்றும் லெப்டினன்ட் கர்னல் பவித்ரன் ராஜன் ஆகிய இரு மூத்த அதிகாரிகள் இணைந்து தயாரித்த இந்த ஆய்வறிக்கையை, நேட்டோ அமைப்பு நிதியளித்து வெளியிட்ட சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று 10 இடங்களில் பிரதானமாக மேற்கோள் காட்டியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஹைப்ரிட் வார்ஃபேர்

போர்க்களத்தை மாற்றும் ஹைப்ரிட் வார்ஃபேர் தொழில்நுட்பம்

கடந்த ஜனவரி மாதம் டெல்லியை சேர்ந்த சிஎஸ்டிஆர் மையம் வெளியிட்ட பியாண்ட் தி கைனடிக் என்ற இந்த ஆய்வுக் கட்டுரையில், நவீன போர்கள் வெறும் ராணுவ வீரர்களையும் இயந்திரங்களையும் மட்டும் சார்ந்தவை அல்ல என்று விளக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்கள், சமூக ஊடகங்களின் அல்காரிதம்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆகியவை மூலம் மக்களின் கருத்துக்களை மாற்றி, எதிரி நாட்டின் முடிவெடுக்கும் திறனை முடக்குவதே ஹைப்ரிட் மற்றும் காக்னிடிவ் போர்க்கலை என்று அந்த ஆய்வில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

10 மேற்கோள்

நேட்டோ வெளியீட்டில் 10 இடங்களில் மேற்கோள்

போலந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு சங்கம் சார்பில் நேட்டோவின் அறிவியல் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட ஹைப்ரிட் வார்ஃபேர் குறித்த புத்தகத்தில், இந்திய அதிகாரிகளின் கூற்றுகள் 10 முறை குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் போர்க்கலை குறித்த அத்தியாயத்தில், ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் நாடு ஸ்டார்லிங்க் மற்றும் கிளியர்வியூ ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய விதம் குறித்து இந்திய அதிகாரிகள் செய்த துல்லியமான பகுப்பாய்வை நேட்டோ ஆய்வாளர்கள் பெரிதும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

பாராட்டு

ஜெனரல் வி.கே.சிங் பெருமிதம் மற்றும் பாராட்டு

இந்திய ராணுவத்தின் இந்தச் சாதனை குறித்து முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி.கே.சிங் பாராட்டியுள்ளார்.

இது இந்திய உத்திசார் சிந்தனைக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிரி நாட்டின் தகவல் அமைப்புகளைப் போரின்றியே முடக்கும் தந்திரங்களை இந்த ஆய்வு விளக்கியுள்ளது. உலகளவில் இந்திய ராணுவ வீரர்களின் நுண்ணறிவையும் மேலாண்மைத் திறனையும் இது மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

ADVERTISEMENT