Loading...
நாதுலா கணவாய் வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: இந்தியா - சீனா எல்லையில் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்
இந்தியா - சீனா எல்லையில் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்குகிறது

நாதுலா கணவாய் வர்த்தகம் மீண்டும் தொடக்கம்: இந்தியா - சீனா எல்லையில் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2026
04:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா - சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் வழியிலான எல்லை வர்த்தகம் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்குகிறது. 2020-இல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த வர்த்தக பாதையை மீண்டும் திறக்க இரு நாட்டு அரசுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,310 மீட்டர் (14,140 அடிகள்) உயரத்தில் கிழக்கிமய மலையில் அமைந்துள்ள நாதுலா கணவாய், பண்டைய பட்டுப் பாதையின் முக்கிய பகுதியாகத் திகழ்ந்தது.

முக்கியத்துவம்

நாதுலா கணவாயின் வரலாற்று முக்கியத்துவம்

திபெத்திய மொழியில் "செவிமடுக்கும் காதுகள் கொண்ட கணவாய்" எனப் பொருள்படும் பாதை, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கையும் இணைக்கும் மிக முக்கியப் பொருளாதார மற்றும் மூலோபாய வாயிலாக விளங்கி வருகிறது.

1962-இல் நடைபெற்ற இந்தியா-சீனா போருக்கு பிறகு மூடப்பட்ட எல்லைப் பாதை, 2006-இல் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

இருப்பினும், 2020-இல் ஏற்பட்ட எல்லைப் பதற்றங்கள் மற்றும் தொற்றுநோய் அச்சுறுத்தல்களால் வர்த்தகம் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது நிலவும் எல்லை விவகாரங்களுக்கு இடையே, லடாக்கை தொடர்ந்து இருநாடுகளும் உறவை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் முயற்சியின் பலனாக இந்த வர்த்தகப் பாதை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வர்த்தகம்

வர்த்தகம் செய்யப்படும் பொருட்களும் பொருளாதார நன்மைகளும்

இப்பாதையின் வழியே குறிப்பிட்ட பொருட்களின் பரிமாற்றம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி, இந்தியத் தரப்பில் விவசாயக் கருவிகள், போர்வைகள், தேயிலை, காபி, சமையல் எண்ணெய், மிதிவண்டிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படும் வேளையில், திபெத்திலிருந்து மூல ஆட்டு ரோமம், யாக் வால்கள், மூலிகை மருந்துகள், விரிப்புகள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

இப்பாதையின் வர்த்தக மீளுருவாக்கம் மூலம் சிக்கிம் பகுதியின் உள்ளூர் வர்த்தகர்கள், கிடங்கு உரிமையாளர்கள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சிறு தொழில்கள் பெரும் பொருளாதார வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது எல்லை பகுதியில் அமைதியை நிலைநிறுத்தவும் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

ADVERTISEMENT