யூடியூபர்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
'மான் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் இந்திய மக்களிடம் தொடர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டு மக்களுடன் உரையாடுவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார் அவர். இந்நிலையில், 'நரேந்திர மோடி' என்ற தன்னுடைய யூடியூப் பக்கத்தில், யூடியூபர்களிடத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மோடியின் யூடியூப் பக்கத்தில் இதுவரை 21,000 காணொளிகள் பகிரப்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பக்கத்தை 1.79 கோடி யூடியூப் பயனாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக தானும் ஒரு யூடியூபராக இருக்கும் நிலையில், சக யூடியூபர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுப்பதாக தன்னுடைய காணொளியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் கோரிக்கைகள் என்ன?
இந்திய பிரதமர் வேட்பாளராக இருந்த போதிருந்தே, மோடி முன்வைக்கும் முக்கியமாக கருத்துக்களுள் ஒன்று, இந்திய தயாரிப்புகளை ஆதரிப்பது. அதனையே யூடியூபர்களிடமும் கோரிக்கையாக விடுத்திருக்கிறார் அவர். தூய்மை, டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இந்திய தயாரிப்புகளை ஆதரித்தல், ஆகியவைற்றை முன்னிறுத்திய காணொளிகளைப் பதிவிடுமாறு யூடியூபர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் அவர். யூடியூப் தளமானது இன்று பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், ஒரு கற்றல் தளமாக, ஒரு வருவாய் அளிக்கும் தளமாக, ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கக்கூடிய தளமாக வளர்ந்திருக்கிறது. அத்தளத்தின் மூலம் இந்திய மக்களிடயே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறார் பிரதமர் மோடி. நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உங்களால் முடிந்த இந்த சிறு பங்களிப்பை செய்யுங்கள் எனக் இந்திய யூடியூபர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.