இன்று பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள்: அவர் கடந்து வந்த பாதை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்டம்பர் 17) தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை இந்தியா முழுவதும் உள்ள பாஜகவினர் வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 17, 1950இல், தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீராபா மோடியின் ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக பிரதமர் மோடி பிறந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பிறந்ததால், சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
பிரதமர் மோடியின் ஆரம்ப வாழ்க்கை
வடக்கு குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான வட்நகரில் அவரது வாழ்க்கை தொடங்கியது. பிரதமர் மோடி ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். சுமார் 40 அடிக்கு 12 அடி கொண்ட ஒரு சிறிய மாடி வீட்டில் அவரது குடும்பம் வசித்து வந்தது. நரேந்திர மோடியின் ஆரம்ப காலங்கள் அவருக்கு கடினமான பாடங்களைக் கற்பித்தன. வறுமையின் காரணமாக, தனது குடும்பத்திற்கு சொந்தமான டீ ஸ்டாலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
சிறுவயதிலேயே அரசியலில் ஈடுபாடுடன் இருந்த பிரதமர் மோடி
மேலும், சிறு வயதில் இருந்தே பிரதமர் மோடி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்(ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தார். 1970களில் இருந்தே அவர் அரசியலில் தான் இருந்தார் என்றாலும், 1990களின் பிற்பகுதி வரை அவரது அரசியல் வாழ்க்கை குறிப்பிடத்தக்க வகையில் அமையவில்லை. 1987இல் குஜராத் பாஜகவின் பொதுச் செயலாளராக மோடி பணியாற்றத் தொடங்கினார். 1995இல் குஜராத்தில் பாஜக பெரும்பான்மையை பெற்று வென்றது. இதனையடுத்து, அவர் விரைவாக உயர்ந்தார்.
பிரதமர் மோடியின் அரசியல் பயணம்
அக்டோபர் 7, 2001 அன்று, நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவர் தனது முதல் அரசியலமைப்புப் பதவியை ஏற்றுக்கொண்டார். அன்று முதல், அவர் நின்ற தேர்தல்களில் எல்லாம் வெற்றி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றினார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தின் முதலமைச்சராக இருந்த அவர், தொடர்ந்து இரண்டு பொது தேர்தலிலும் வெற்றி பெற்றார்.
தோல்வி அறியாத பிரதமர்
2014 இல், மோடி தலைமையிலான பாஜக அனைத்து எதிர்ப்பையும் தோற்கடித்து பொது தேர்தலில் வெற்றி பெற்றது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மையை வென்ற முதல் கட்சி என்ற பெயர் அப்போது பாஜகவுக்கு கிடைத்தது. பிரதமர் ஆவதற்கு முன்பு, பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2001 முதல் 13 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். அவரது இரண்டாவது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், வரலாற்றிலும் இந்திய அரசியலிலும் மிகவும் பிரபலமான பிரதமர் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.