3 குட்டிகளைப் ஈன்றது நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட சிறுத்தை
நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட நமீபிய சிறுத்தையான ஜ்வாலா, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று பகிர்ந்து கொண்டார். "நாடு முழுவதும் உள்ள அனைத்து வனவிலங்கு வீரர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 3 ஆம் தேதி, இன்னொரு நமீபிய சிறுத்தை மூன்று குட்டிகளைப் பெற்றெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, குனோ தேசிய பூங்காவில் ஏழு குட்டிகள் மற்றும் 13 பெரிய சிறுத்தைகள் உள்ளன. மார்ச் 2023 இல், ஜ்வாலா நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்தது. ஆனால் அதில் ஒன்று மட்டுமே உயிர் பிழைத்தது.
மத்திய அரசின் 'பிராஜெக்ட்-சீட்டா' திட்டம்
ஆசிய சிறுத்தைகள் இந்தியாவில் முழுவதுமாக அழைந்துவிட்டதால், மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு, 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி 'பிராஜெக்ட்-சீட்டா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 20 ஆப்பிரிக்க சிறுத்தைகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டன. அப்படி மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்ட 20-சிறுத்தைகளில் 10 சிறுத்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளன. கடந்த வாரம், நமீபியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஷௌர்யா என்ற சிறுத்தை உயிரிழந்தது என்பது நினைவுகூர வேண்டியது, சண்டைகள், நோய்கள், விபத்துகள் மற்றும் வேட்டையாடும்போது ஏற்படும் காயங்கள் ஆகியவை இந்த இறப்புகளுக்கு சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெப்ப மாற்றங்கள், வானிலை மாற்றங்கள் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.