புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகிறது நாமக்கல்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாறத் தயாராக உள்ளது. புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் கண்டறியப்பட்ட 35,582 கற்போர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி ஆறு மாதங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட 1,211 மையங்களில் எழுதப் படிக்கத் தெரிந்ததற்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இலக்கு
முழு எழுத்தறிவு இலக்கு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி உட்படப் பல கல்வித்துறை அதிகாரிகள் இத்தேர்வு மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாநிலம் முழுவதும் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற இலக்கின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம், இந்த மாதம் இறுதியில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்ற நிலையை அடைய முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை உறுதி செய்யும் வகையில், கண்டறியப்பட்ட அனைவருக்கும் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டுத் தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெரிய சாதனைக்கு ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எனப் பல தரப்பினரின் முழு முனைப்பானப் பணியே காரணம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.