தாய்மண் வீடு: மண்ணால் வீடு கட்டி பூமித்தாயை கௌரவித்த நபர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் சிவில் இன்ஜினியர் ஒருவர், தனது சொந்த கிராமமான அன்னமங்கலத்தில், முழுக்க முழுக்க மண்ணால் வீடு கட்டி அசத்தியுள்ளார். இந்த வீடு கட்டுவதற்கு சிமெண்ட், கான்கிரீட் போன்றவை முற்றிலுமாக பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். "'தாய்மண் வீடு' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீட்டை கட்டி முடிக்க எனக்கு 3 வருடங்கள் ஆனது. இங்கிருந்து 30 மீட்டர் சுற்றளவில் எடுக்கப்பட்ட மண்ணால் மட்டுமே இந்த வீடு கட்டப்பட்டிருப்பதால் இதற்கு இந்த பெயரை வைத்தேன். இதை மலிவான வீடு என்று சொல்லி விட முடியாது. 1100 சதுர அடியில் உள்ள இந்த வீட்டை கட்டுவதற்கு குறைந்தபட்சம் ரூ.17 லட்சம் செலவானது." என்று இந்த வீட்டு உரிமையாளர் ஜெகதீசன் கூறியுள்ளார்.
மின்சார செலவுகளை மிச்சப்படுத்தும் வீடு
சிவப்பு மண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத செங்கற்களால் எப்படி வீடு கட்டுவது என்பதை கற்றுக்கொள்ள புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஜெகதீசன் பயிற்சிக்கு சென்றிருக்கிறார். அங்கு கம்ப்ரஸ்டு ஸ்டேபிலைஸ்டு எர்த் பிளாக்ஸ்(CSEB) மற்றும் ஆர்ச் வால்ட் டோம்(AVD) ஆயிவற்றை எப்படி செய்வது என்பதை அவர் கற்றுக்கொண்டார். உலோகம் மற்றும் சிமென்ட் அடிப்படையிலான மோல்டிங்கின் பயன்பாட்டைக் குறைக்க, குறைந்தபட்சம் 10,000 சுடப்படாத செங்கற்களைக் கொண்டு வால்ட் மற்றும் வளைவு கூரைகள் செய்யப்படுகின்றன. சுடப்படாத செங்கற்களாலேயே இந்த வீடு கட்டப்பட்டுள்ளதால் இந்த வீடு, குளிர் காலத்தில் இதமாகவும் வெயில் காலத்தில் ஜில் என்றும் இருக்கும் என்று இதை பார்த்து பார்த்து வடிவமைத்த ஜெகதீசன் கூறியுள்ளார். இதனால், இந்த வீட்டிற்கான மின்சார செலவு 20 ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறதாம்.