Loading...
உணவகங்களுக்கு நோட்டீஸ் இல்லை, உடனடி சீல்: நாடு முழுவதும் புயலைக் கிளப்பும் 'Mundhe Effect'
மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஆணையர் துகாராம் முண்டே IAS

உணவகங்களுக்கு நோட்டீஸ் இல்லை, உடனடி சீல்: நாடு முழுவதும் புயலைக் கிளப்பும் 'Mundhe Effect'

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஆணையர் துகாராம் முண்டே தலைமையிலான கடுமையான சோதனைகளும் நடவடிக்கை முறைகளும், தற்போது 'Mundhe Effect' என்ற பெயரில் இணையத்திலும் இந்திய உணவு பாதுகாப்புத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக உணவகங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், குறைகளைச் சரிசெய்ய அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பப்படுவதே வழக்கம். ஆனால், முண்டேவின் தலைமையிலான குழுவினர் எவ்வித கால அவகாசமும் வழங்காமல், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட உடனேயே உணவகங்களின் உரிமங்களை தற்காலிகமாக நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இந்த அதிரடி மாற்றமே உணவக உரிமையாளர்களிடையே கடும் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பதாக 'முண்டே எஃபெக்ட்' எனக் குறிப்பிடப்படுகிறது.

வரவேற்பு

முன்னாள் அதிகாரிகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு

இந்த அதிரடி சோதனைகளில் இருந்து தப்பிக்க, பல பிரபல உணவக உரிமையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் முன்னாள் அதிகாரிகளை பிரத்யேகமாக நியமித்து, தங்களது உணவகங்களின் சமையலறைகளில் முன்கூட்டியே போலியான சோதனைகளை நடத்தி, குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

ஐஐடி மும்பை உணவகம், பம்பாய் உயர் நீதிமன்ற உணவகங்கள் மற்றும் நூற்றாண்டு பழமையான பார்சி டைரி ஃபார்ம் போன்ற பிரபல நிறுவனங்களும் இந்த சோதனைகளில் சிக்கி உரிமங்களை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்கள்

பிற மாநிலங்களில் பரவும் அதிரடி நடவடிக்கைகள்

மகாராஷ்டிராவின் இந்த வெற்றிகரமான நடைமுறையைப் பின்பற்றி பிற மாநிலங்களும் தீவிர சோதனைகளில் இறங்கியுள்ளன.

கர்நாடகா: பெங்களூருவில் உள்ள நட்சத்திர உணவகங்கள் முதல் அண்மையில் சீல் வைக்கப்பட்ட 'Zepto' கிடங்கு வரை சிறப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குஜராத்: போலி பாலாடைக்கட்டி (Analogue Paneer) மற்றும் சீஸ் தயாரிப்பு, விற்பனைக்கு ஆகஸ்ட் 5 முதல் மாநில தழுவிய முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா: 'H-FAST' அமைப்பின் மூலம் இதுவரை 650-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு, 246 டன் கலப்பட உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் 44,000-க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 857 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT