ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம்
இந்திய குடியரசு தலைவரின் மாளிகையில் உள்ள தோட்டங்கள் இன்று(ஜன 28) 'அம்ரித் உத்யன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு முன் இது முகலாயத் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. "சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்று கொண்டாடுவதால், ராஷ்டிரபதி பவன் தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யன்' என்று ஒரு பொதுவான பெயரை வைப்பதில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மகிழ்ச்சியடைகிறார்" என்று ஜனாதிபதியின் துணை செய்தி செயலாளர் நவிகா குப்தா ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
அம்ரித் உத்யன் ஜனவரி 31 முதல் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது
ஆண்டுக்கு ஒருமுறை இந்த தோட்டம் பொது மக்களுக்கு திறக்கப்படும். இம்முறை பொது மக்கள் ஜனவரி-31 முதல் இந்த தோட்டங்களை பார்வையிடலாம். இது மார்ச்-26 வரை திறந்திருக்கும். ராஷ்டிரபதி பவனின் அதிகாரப்பூர்வ இணையதளம் தோட்டத்தின் விவரங்களைப் பகிர்ந்துள்ளது. "15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் அம்ரித் உத்யன் தோட்டம், குடியரசுத் தலைவர் மாளிகையின் உயிர் என்று கூறினாலும் மிகையாகாது. அம்ரித் உத்யன், ஜம்மு-காஷ்மீரின் முகலாய தோட்டங்கள், தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள தோட்டங்களை போல அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியா மற்றும் பாரசீகத்தின் சிறு ஓவியங்கள் கூட பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இம்முறை இந்த தோட்டங்கள்(மூலிகைத் தோட்டம், போன்சாய் தோட்டம், மத்திய புல்வெளி, நீண்ட தோட்டம் மற்றும் வட்டத் தோட்டம்) இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும்.