மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்
மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே போன்ற ஒரு மேற்கு வங்கத்திலும் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இரண்டு பெண்களை ஒரு கூட்டம் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவம் மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. மால்டாவின் பகுவாஹாட்டில் உள்ள உள்ளூர் மக்கள் திருட்டு சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை
இரண்டு பெண்களை ஒரு கூட்டம் அடித்து அரை நிர்வாணமாக அழைத்து செல்வது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோவிலும் நன்றாக தெரிகிறது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க காவல்துறையிடம் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து பேட்டி அளித்த பாதிக்கப்பட்டவரின் மகள், திருட்டுச் சந்தேகத்தின் பேரில் தனது தாயும் அத்தையும் சிறையில் இருப்பதாக கூறியுள்ளார். "செவ்வாய் கிழமை(ஜூலை 18) எலுமிச்சம்பழம் விற்க என் அம்மாவும் அத்தையும் சந்தைக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒரு இனிப்பு கடை உரிமையாளர் எலுமிச்சை பழங்களை திருடியதாக அவரகள் மீது குற்றம் சாட்டினார். அதன் பிறகு அம்மாவையும், அத்தையையும் எல்லாரும் பிடித்து அடித்தனர். அவர்களது ஆடைகளையும் களைந்தனர். இது அநியாயம்" என்று பாதிக்கப்பட்டவரின் மகள் கூறியுள்ளார்.