மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை - ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினத்தில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் அவர், "கடந்த 2 நாட்களாக தென்தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அதிலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் சுமார் 40லட்சம் மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களும், தாமிரபரணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் அதனையொட்டியுள்ள பகுதிகளும் மோசமான நிலையில் உள்ளது என்றும் அவர் எழுதியுள்ளார்.
உணவு பொருட்களும் ஹெலிகாப்டர்கள் மூலமே எடுத்து செல்லப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்
மேலும் அவர், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளுக்காக என்.டி.ஆர்.எப் மற்றும் எஸ்.டி.ஆர்.எப் உள்ளிட்ட குழுக்கள் திரட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து நிவாரண பொருட்களும் திரட்டப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். சாலைகள் துண்டிக்கப்பட்ட காரணத்தினால் தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை கொண்டு மக்களை மீட்பு குழுவினர் மீட்டெடுத்து வருகிறார்கள். உணவு பொருட்களும் ஹெலிகாப்டர்கள் மூலமே எடுத்து செல்லப்படுகிறது. இத்தகைய பெரும் பேரிடர் காரணமாக அதிக எண்ணிக்கை கொண்ட குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மீட்கவும், நிவாரண பொருட்களை விநியோகிக்கவும் எங்களுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது. எனவே அதிகபட்ச ஹெலிகாப்டர்களை வழங்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.