மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது
இன்று மாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு பாதையும் தற்போது சேதம் அடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி 1.14 கோடி செலவில் மாற்றுதிறனாளிகளுக்கான இந்த சிறப்புப் பாதை மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது. திறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த பாதை இப்போது சேதம் அடைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதையை அனைவரும் உபயோகிப்பதாக நடுவில் ஒரு பெரும் சர்ச்சை வேறு ஏற்பட்டது.
புயலால் தொடர் சேதங்கள்!
இது போக, மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. கடல் அரிப்பு இப்படியே தொடர்ந்தால் கோயில் முழுவதுமாக அடித்து செல்ல வாய்ப்புள்ளது என்பதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட கடலோர ஊர்களில் தாழ்வானபகுதிகளில் உள்ள சுமார் 500 வீடுகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கனமழைப் பெய்வதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. மேலும், மாண்டஸ் புயல் காரணமாக குமரி மற்றும் தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியுள்ளது. இதனால், மக்களும் சுற்றுலா பயணிகளும் திகைப்படைந்துள்ளனர்.