ஒடிசாவின் அடுத்த முதல்வர் மோகன் மாஜியைப் பற்றிய முழு விவரம்
ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி பதவியேற்பார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடிசாவின் பாஜக அரசாங்கத்தில் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகிய இரு துணை முதலமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். ஒடிசா முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டம் நடந்து முடிந்ததை அடுத்து, இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். பழங்குடியினத் தலைவரான மோகன் சரண் மாஜி , கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் நின்று 87,000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார்.
பதவியேற்பு விழா ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும்
அதே தொகுதியில் நின்ற பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிவா மஞ்சரி நாயக் ஆகியோரை அவர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் மாஜி மற்றும் பிற தலைவர்களின் பதவியேற்பு விழா ஜூன் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புவனேஸ்வர் சென்று அங்கிருக்கும் விமான நிலையத்திலிருந்து ராஜ்பவனுக்குச் செல்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஒடிசா முதல்வர் மற்றும் பிற அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாரிந்த மோகன் மாஜி?
மோகன் சரண் மாஜி கனிம வளங்கள் நிறைந்த கெண்டுஜார் மாவட்டத்தைச் சேர்ந்த வலுவான பழங்குடித் தலைவர் ஆவார். மாஜி ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. "மோகன் மாஜி ஒடிசா சட்டமன்றத்தில் தனது பணியின் சிரத்தையால் அறியப்பட்டவர்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஜதீந்திர தாஷ். மோகன் மாஜி இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத ஒரு அரசியல் தலைவர் ஆவார். அவர் விசுவாசமான பாஜக உறுப்பினராகவும், வலுவான கட்சி தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மோகன் மாஜிக்கு வலுவான ஆர்எஸ்எஸ் தொடர்புகளும் உள்ளன. மோகன் மாஜியின் அரசியல் வாழ்க்கை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.