தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் இந்தியாவின் புதிய போர் விமானமான தேஜசில் சிறுபயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த அனுபவம் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர். "தேஜசில் இன்று பறக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னிறவடைவதில் பிற நாடுகளுக்கு நாம் சளைத்தவர்களல்ல. இந்திய விமானப் படை, DRDO, HAL மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், மற்றொரு பதிவில், தேஜசில் பயணம் செய்வது மிகவும் சிறப்பான ஒரு அனுபவமாக இருந்தது எனவும், நமது நாட்டின் திறன் மீதான நம்பிக்கை இன்னும் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
இந்தியாவின் LCA தேஜஸ் மார்க் 2:
இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் LCA தேஜஸ் மார்க் 2 போர் விமானங்களானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவிருக்கின்றன. LCA தேஜஸ் மார்க் 1a போர் விமானத்தின் மேம்பட்ட வடிவமாக உருவாகி வருகிறது LCA தேஜஸ் மார்க் 2 போர் விமானம். குறைந்த எடை கொண்ட போர் விமானமாக தயாரிக்கப்படும் தேஜஸ் மார்க் 2 விமானங்களில் அமெரிக்காவின் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் பயன்படுத்தப்படவிருக்கிறது. இதற்கான தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அமெரிக்கா வழங்கியிருக்கிறது. அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்ட ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய போர் விமானங்களுக்கான இன்ஜினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவிருக்கின்றன.