செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி
சென்னை கந்தன்சாவடி பகுதியிலுள்ளவர் ப்ரீத்தி(23), இவர் பி.காம்.,படித்து முடித்துவிட்டு தற்போது கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சேல்ஸ் கேர்ளாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, ப்ரீத்தி கடந்த 2ம்தேதி தனது பணியினை முடித்துவிட்டு மின்சார ரயில் மார்க்கமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இந்திரா நகர் ரயில் நிலையத்தின் அருகே ப்ரீத்தியின் செல்போனை பறித்த 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்கள். அவர்கள் போனை பறிக்கும்பொழுது அப்பெண்ணையும் வேகமாக இழுத்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறி அப்பெண் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த ப்ரீத்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அங்கிருந்தோர் உடனே அருகிலிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்கள்.
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்
பின்னர் இது குறித்து வழிப்பறி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, திருவான்மியூர் ரயில்வே காவல்துறை அந்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் பறித்துச்சென்ற செல்போனை டிராக் செய்ததில் அடையாறில் உள்ள மணிமாறன் மற்றும் பட்டினம்பாக்கம் பகுதியினை சேர்ந்த விக்னேஷ்(27) ஆகியோரை கண்டுபிடித்து திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் நேற்று(ஜூலை.,7) இரவில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரீத்தி இன்று(ஜூலை.,8) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகள் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.