இந்தியாவில் அதிக மற்றும் குறைவான சொத்து மதிப்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்தியாவில் குடிமக்களை விட அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், அதிக சொத்துமதிப்பைக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர் யார்? இது குறித்த தகவல்களைத் தான் வெளியிட்டிருக்கிறது 'Association for Democratic Reforms' (ADR) அமைப்பு. ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை வேண்டுகிற, ஜனநாயகத்தை வழுவாக்குவதற்கான செயல்பாடுகளைக் கொண்ட லாப நோக்கமற்ற, கட்சி சாரா அமைப்பு இந்த ADR. இந்தியாவில் அதிக மற்றும் மிகக் குறைவான சொத்து மதிப்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டிருக்கிறது இந்த அமைப்பு.
அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்:
இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட டாப் 20 சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களே. கர்நாடாக சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.64.3 கோடி. மேலும், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சிவக்குமாரே, இந்தியாவில் அதிக சொத்துமதிப்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1,413 கோடி. இரண்டாவது இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் புட்டசுவாமி கௌடா இடம்பெற்றிருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,267 கோடி. இந்தியாவில் மிகக்குறைவான சொத்து மதிப்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நிர்மல் குமார் தாரா. இவரது சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 தானாம்.