மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் "முதல்வர் மருந்தகம்" என்ற திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார். நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள மக்கள் மருந்துகளுக்காக அதிகம் செலவழிக்கும் நிலையில்,அவர்களுக்கு மலிவு விலையில் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. 2025 பொங்கல் அன்று தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இந்த திட்டத்தின் கீழ் மருந்தகம் தொடங்குபவர்களுக்கு ரூ.3 லட்சம் மானியத்தோடு கடனுதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்திய அளவில் மலிவு விலை மருந்தகம்
இந்தியாவில் 2008இல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மலிவு விலை மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. எனினும் பெயரளவில் மட்டும் 2014 வரை நாடு முழுவதும் வெறும் 80 மருந்தகங்கள் வரை மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், 2015இல் அப்போதைய பிரதமர் மோடி திட்டத்தை விரிவாக்கி நாடு முழுவதும் மீண்டும் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் தற்போது இந்தியா முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அனைத்து விதமான நோய்களுக்கும் மலிவு விலையில் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழக அரசும் மலிவு விலை மருந்தகம் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இது தமிழகத்தில் கூடுதலான மக்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.