தெரியாத எண்ணிலிருந்து வந்த மிஸ்டு கால் - 50 லட்சத்தை இழந்த டெல்லி தொழிலதிபர்
உங்கள் ஓ.டி.பி.-யை யாரிடமும் பகிராதீர்கள் என்றும், கால், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் கூட ஒன் டைம் பாஸ்வேர்ட்-ஐ கேட்டு இணைய மோசடிகள் நடப்பது குறித்தும் அவ்வபோது சைபர் க்ரைம் அதிகாரிகளால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஷம்ஷேர் சிங் என்பவரது செல்போனிற்கு பலமுறை பிளாங்க் மற்றும் மிஸ்டு கால் வந்துள்ளது. அவர் சில அழைப்புகளைப் புறக்கணித்த நிலையில் தொடர் அழைப்புகள் வந்த காரணத்தால் ஒரு அழைப்பை எடுத்துள்ளார். ஆனால், மறுபுறம் யாரும் பேசவில்லை. அதன் பின்னர் அவருடைய செல்போனில் குறுஞ்செய்தியை சோதித்தபோது, அவருடைய கணக்கிலிருந்து 50 லட்சம் ரூபாய் பிற கணக்குகளுக்கு மாற்றப்பட்டதை கண்டு அதிர்ந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு
இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கை சைபர் க்ரைம் (IFSO) பிரிவு தற்போது விசாரித்து வருகிறது. அதன்படி அவர்களின் முதற்கட்ட விசாரணையில் ஷம்ஷேர் சிங் வங்கி கணக்கில் இருந்து கொள்ளையடித்த சைபர் கொள்ளையர்கள் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், சிம் ஸ்வாப்பிங் டெக்னாலஜியின் மூலம் பாதிக்கப்பட்டவரின் செல்போனை கட்டுக்குள் கொண்டுவந்து சைபர் கொள்ளை கும்பல் இவ்வாறு பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிம் ஸ்வாப் என்றால் ஒருவருடைய சிம் கார்ட்-ஐ, நகல் (Duplicate) செய்து அதன் மூலம் ஒரே நேரத்தில் நிஜ உரிமையாளரின் அழைப்புகள், குறுஞ்செய்தி-களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..