புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, அங்குள்ள மருத்துவர்கள் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது உடல்நிலை தேறிய பின்னர், விசாரணை கைதிகளுக்கான தனி சிறை அறையில் தங்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது. அங்கு அவருக்கு, மெத்தை, நாற்காலி, மேஜை, மேற்கத்தியக்கழிவறை, கொசுவலை, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது என்றும், அவருடன் 24 மணிநேரமும் இருக்க முதல்நிலை காவலர் மற்றும் உதவி ஜெயிலர் ரேங்க் அளவிலான 2 பேர் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்ட செந்தில் பாலாஜி
இதனிடையே, சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு காலை உணவாக ப்ரெட், பழங்கள் மற்றும் மாதுளை ஜூஸ் கொடுக்கப்படுகிறதாம். அதனை தொடர்ந்து, மதிய உணவாக, தயிர் சாதம் கொடுக்கப்படுகிறதாம். அதோடு மாலை நேர சிற்றுண்டியாக, பச்சை பயறு வழங்கப்படும். இரவுநேர உணவாக பால், இடியாப்பம், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் நேற்று(ஜூலை.,18) காலை 20 நிமிஷம் நடைப்பயிற்சி மேற்கொண்ட செந்தில் பாலாஜி, பின்னர் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் மாலை நேரத்திலும் தனது நடைபயிற்சியினை மேற்கொண்டுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் அமைச்சர் வைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்நாள் அவர் பிற கைதிகளோடு பேசுவதினை தவிர்த்து கொண்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.