அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று காலை, பணமோசடி வழக்கு தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி சம்மந்தப்பட்ட 40 இடங்களில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜியின் இல்லம், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறை, அவரது சகோரர் வீடு உட்பட பல இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
செந்தில் பாலாஜிக்கு நாளை பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது
மேலும், நேற்று சுமார் 18 மணிநேரம் செந்தில் பாலாஜியிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவருக்கு நாளை பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, "அமலாக்க இயக்குனரகம் பதிவு செய்த FIRயின் படி, ஜூன் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்" என்று உத்தரவிட்டுள்ளார்.