அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அவர்களது தண்டனை குறித்த விவரங்கள் இன்று(டிச.,21) வெளியானது. அதற்கு முன்னதாக பொன்முடி சார்பான வழக்கறிஞர், அமைச்சரின் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். எனினும், அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை விதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கிய தமிழக ஆளுநர்
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோயுள்ளது. மேலும், இவர் வசம் இருந்த உயர்கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை உள்ளிட்டவை மூத்த அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜகண்ணப்பன் வசம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் காதி, கிராம தொழில்கள் துறைகள் இருந்தது. இதில் காதி மற்றும் கிராம தொழில்கள் துறை மற்றொரு கைத்தறித்துறை அமைச்சரான ஆர்.காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த பரிந்துரைகளை மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு செய்த நிலையில், ஆளுநர் இவைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.