தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவு ஒவ்வாமை காரணமாக அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை முடிந்த வீடு திரும்பியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் மற்றும் பிற வசதிகளை பற்றி விசாரித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
உடல்நலம் பாதிப்பு
ஆய்வுகளை முடித்த பிறகு, சென்னை திரும்பிய அன்பில் மகேஷ்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகி விட்டது. பரிசோதனையில் அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டது என கண்டறியப்பட்டது. அதனால் நேற்று இரவு முழுவதும் மருத்துவர் கண்காணிப்பில் இருந்த அமைச்சர், இன்று காலை குணமடைந்துள்ளார். அதனால் அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.