சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசின் சமீபத்திய முடிவின்படி, ஆறுகள், கால்வாய்கள், மற்றும் ஓடைகளில் கிடைக்கும் நீரைக் கொண்டு உள்ளூர் மின் உற்பத்தியை ஊக்குவிக்குமாறு சிறிய அளவிலான சிறுபுனல் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், புதிய கொள்கை குறித்து கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின்நிலைய திறனை கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது உள்ளூர் மின் உற்பத்திக்கான வாய்ப்புகளை வழங்குவதுடன், ஊரக பகுதிகளில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
இந்த கொள்கை கார்பன் உமிழ்வை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் தரமான மின்வளங்களை உருவாக்குவதை ஊக்குவிக்கும். கால்வாய்கள், ஆறுகள், மற்றும் ஓடைகளில் இருந்து தடையற்ற மின்சாரம் கிடைக்க ஊக்குவிக்கும். நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிசக்திகளுக்கு மாறாக சிறுபுனல் மின் திட்டங்களை மேம்படுத்தும் ஊக்கச் சலுகைகளை வழங்குவதன் மூலம் தனியார்கூட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை ஈர்க்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும். சிறு புனல் மின் திட்டங்களில் ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும். சுற்றுச்சூழல் பற்றிய புரிதலை பொதுமக்களில் வளர்க்கும். இந்த கொள்கை 5 ஆண்டுகளுக்கு செயல்படும். தேவையெனில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
இத்திட்டம் விதிக்கும் கட்டுப்பாடுகள்
நீர் பயன்பாட்டை மீண்டும் அதே வழியில் திருப்பியளிக்க வேண்டும், மற்றும் ஓடையின் இயற்கையான பாதையில் குறைந்தபட்ச இடையூறு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கால்வாய்களில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக நீரை திறப்பதற்கே மின்சார உற்பத்தி செய்யப்படும். மின்சார உற்பத்திக்காக நீரை திறப்பது தொடர்பாக திட்ட மேம்பாட்டாளர்களுக்கு உரிமை கிடையாது. திட்ட மேம்பாட்டாளர்கள், ஒரு மெகாவாட் திறனை கொண்ட அமைப்புக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் 10 சதவீதத்தை அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும். உற்பத்தி இடத்திற்கும் மின் தொடரமைப்பிற்கும் இடையிலான மின்கடத்திகள் அமைப்பது மேம்பாட்டாளரின் பொறுப்பாகும்.