இந்திய தேர்தல் குறித்து சர்ச்சை கருத்து; மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு திட்டம்
செய்தி முன்னோட்டம்
2024 இந்திய பொதுத் தேர்தல் குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து சமூக ஊடக நிறுவனமான மெட்டாவை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் நாடாளுமன்ற நிலைக்குழு வரவழைக்க உள்ளது.
பாஜக எம்பியும், குழுத் தலைவருமான நிஷிகாந்த் துபே, தவறான தகவல் பரவுவதை முதன்மைக் கவலையாகக் காட்டி, இந்த முடிவை அறிவித்தார்.
சமீபத்திய போட்காஸ்ட் ஒன்றில், பணவீக்கம் மற்றும் கொரோனா தொற்றுநோய் கொள்கைகள் போன்ற காரணங்களால் இந்தியா உட்பட தற்போதைய அரசாங்கங்கள் 2024 இல் உலகளவில் தேர்தலில் தோல்வியடைந்ததாக ஜுக்கர்பெர்க் தவறாகக் கூறினார்.
நிராகரிப்பு
மார்க் ஜுக்கர்பெர்க் கருத்தை நிராகரித்த மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிக்கையை உடனடியாக அதை நிராகரித்து, இந்தியாவின் 2024 மக்களவைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது என்பதை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
640 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்றதாகவும், பிரதமர் மோடியின் மூன்றாவது முறை வெற்றியானது திறமையான நிர்வாகத்திற்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் ஒரு சான்றாகும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
கொரோனா தொற்றின்போது, இலவச தடுப்பூசிகள் மற்றும் உணவுகளை விநியோகித்தல் போன்ற இந்தியாவின் சாதனைகளை அஸ்வினி வைஷ்ணவ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அதே நேரத்தில் ஜுக்கர்பெர்க்கின் கருத்துக்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அமைச்சர், உண்மைத் துல்லியத்தை நிலைநிறுத்துமாறு மெட்டாவை வலியுறுத்தினார்.