தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?
சமூக ஊடக நிறுவனமான மெட்டா ஏஐ லக்னோவில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 21 வயதான அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு, கழுத்தில் கயிற்றை வைத்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகிய நிலையில், காவல்துறை தலைமை இயக்குனரக அலுவலகத்தின் சமூக ஊடக மையத்திற்கு மெட்டாவிடமிருந்து எச்சரிக்கை அலெர்ட் வந்தது. இதையடுத்து விரைவாக செயல்பட்ட காவல்துறை, உடனடியாக அந்த பெண்ணின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தற்கொலை செய்வதை தடுத்து பத்திரமாக மீட்டுள்ளனர். காவல்துறை சென்று தடுக்கும் வரை, பெண்ணின் குடும்பத்தினருக்கு இதுகுறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.
தற்கொலை முயற்சியின் பின்னணி
அந்த பெண் தான் காதலித்து வந்த நபரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆர்ய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். "இந்த திருமணம் சட்டப்பூர்வமாக செல்லாது என்பதால், அந்த நபர் பெண்ணை விட்டுவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்" என்று காவல்துறை உதவி கமிஷனர் மோகன்லால் கஞ்ச் ரஜ்னீஷ் வர்மா கூறினார். இந்நிலையில், பெண்ணை மீட்ட போலீசார் அந்த பெண்ணிடம் விரிவான விசாரணை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், அவரை விட்டுச் சென்ற கணவர் கைது செய்யப்பட்டதாக கமிஷனர் தெரிவித்தார்.