பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, தொழிலார்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போக்குவரத்து துறை அமைச்சர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, கூடுதல் பேருந்துகளையும், போராட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிற்சங்கத்தினரின் துணை கொண்டும் இயக்கி வருவதாக கூறினார். அரசின் புள்ளிவிவரங்களை மறுக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்தினரைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினருக்கும் ஓய்வு தேவை என்பதால் நேரம் செல்ல செல்ல இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மெமோ
இதற்கிடையே வேலை நிறுத்தத்தின் இரண்டாம் நாளான இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 30% ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு, அரசு சார்பாக மெமோ அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மெமோ வழங்கப்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம், திமுகவின் தொமுச, காங்கிரஸின் ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்ததில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.