'என்னை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள்': ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், தன்னையும் பிற மூத்த பிடிபி தலைவர்களையும் அரசாங்கம் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். "இன்று பிற மூத்த பிடிபி தலைவர்களுடன் என்னையும் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு நடந்த அடக்குமுறைக்குப் பிறகு, என் கட்சிக்காரர்கள் ஏராளமானோர் சட்டவிரோதமாக காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இயல்புநிலை குறித்து உச்சநீதிமன்றத்திடம் இந்திய அரசாங்கம் கூறி வருவது வெறும் சித்தப்பிரமையே" என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
'உச்ச நீதிமன்றம் இதை கவனிக்கும் என்று நம்புகிறேன்': முப்தி
"ஒருபுறம், சட்ட விரோதமாக 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததைக் கொண்டாட காஷ்மீரிகளுக்கு அழைப்பு விடுக்கும் ராட்சத போர்டுகள் ஸ்ரீநகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மக்களின் உண்மையான உணர்வை அழிக்க மிருக பலம் பயன்படுத்தப்படுகிறது. சட்டப்பிரிவு 370 விசாரணைக்கு வந்திருக்கும் நேரத்தில் இந்த புதிய பிரச்சனைகளை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கவனிக்கும் என்று நம்புகிறேன், "என்று அவர் மற்றொரு ட்வீட்டில் மேலும் கூறினார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த முப்தியின் கட்சிக்கு ஸ்ரீநகர் நிர்வாகம் நேற்று அனுமதி மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.