'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல்
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்கு தற்போதைய கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான அரசின் ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் ஆகியவற்றுள் சேருவதற்கு நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வரும் ஜூலை 10ம் தேதி திங்கட்கிழமை தான் இந்த விண்ணப்பத்தினை மேற்கொள்ள கடைசி தேதியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ்.மற்றும் பி.டி.எஸ்.பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டு முதல் 'நெக்ஸ்ட்' என்னும் தகுதி தேர்வினை அமலுக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'நெக்ஸ்ட்' தேர்வு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும்
இதன்படி, இந்த நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் தான், பயிற்சி மருத்துவராக பணியினை மேற்கொள்ள முடியுமாம். 2019ம் ஆண்டில் படித்த பேட்ச் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இந்த செயல்முறை அமலுக்கு வருகிறதாம். மேலும் இந்த தேர்வானது இரு தேர்வுகளாக மே மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 28ம் தேதி இந்தியா முழுவதும் இதற்கான மாதிரி தேர்வு நடக்கவுள்ளது என்றும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், நெக்ஸ்ட் தேர்வு மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மத்திய அரசு இதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.