ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் - மா.சுப்பிரமணியம்
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதிய பயனாளர்களை சேர்க்கும் பணியானது தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது. அதன்படி ஒரு ஆண்டிற்கு 1260 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர், "மருத்துவத்துறையின் அடுத்தக்கட்டமாக டாக்டர்.எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்னும் பெயரில் புதிதாக ஓர் கட்டிடம் கட்டப்படவுள்ளது" என்பதனையும் தெரிவித்துள்ளார்.
விரைவில் டெண்டர் அறிவிக்கப்படும் என்று தகவல்
தொடர்ந்து பேசிய அவர், "இந்த கட்டிடம் கட்டப்படுவதற்கான இட தேர்வு பணி நிறைவடைந்த நிலையில் இதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யும் பணிகள், வரைபடம் தயாரிக்கும் பணிகள் உள்ளிட்டவை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இதற்கான டெண்டர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், முதல் அமைச்சர் இதற்கான அடிக்கல் நாட்டுவார்" என்று கூறியுளளார். இதற்கு முன்னதாக சென்னை கிண்டி அரிமா சங்க லேபர் காலனி உயர்நிலை பள்ளியில் நடந்த முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.