
குஜராத் மாநிலம் சூரத் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் உடல்கள் மீட்பு
செய்தி முன்னோட்டம்
குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேரின் உடல் இன்று(நவ.,30) மீட்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரம் சச்சின் ஜிஐடிசி என்னும் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று(நவ.,29) திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தீ பற்றக்கூடிய ரசாயனங்கள் கசிந்ததால் ஏற்பட்ட தீ பிழம்புகளால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது என்று கூறப்படுகிறது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து
வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையினை துவங்கியுள்ளது
சுமார் 9 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தின் பொழுது தொழிற்சாலைக்குள் எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர் என்னும் விவரம் ஏதும் அறியப்படாத நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 24 நபர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிகிறது.
தற்போது இது குறித்த தகவல்களை அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்து மீட்கப்பட்ட 7 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணையினை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.