'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான்
சமீபத்தில் விஜய்யின் 'லியோ' படத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான். இப்படம் குறித்து அண்மையில் அவர் பேசுகையில், 'இப்போதெல்லாம் படங்களில் பாலியல் வன்கொடுமை காட்சிகள் வைப்பதில்லை' என்றும், 'லியோவில் இதுபோன்ற காட்சி இருக்கும். த்ரிஷாவுடன் நடிக்கலாம் என்று நினைத்தேன்'என்றும் பேசியிருந்தார். இது மிகப்பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த த்ரிஷா, 'இவ்வளவு கேவலமான நபருடன் நான் இதுவரை நடிக்காதது மகிழ்ச்சியளிக்கிறது' என்று கூறியிருந்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் சங்கம் அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் மன்சூர்அலிகான்,'நான் மன்னிப்பு கேட்கும் ஜாதி இல்லை' என்றும், 'என்னிடம் கருத்து கேட்காமல் நடிகர் சங்கம் இப்படியொரு அறிக்கையினை வெளியிட்டு இமாலய தவறு செய்துவிட்டது'என்றும் கூறியுள்ளார்.
2 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு
இதற்கிடையே த்ரிஷா குறித்து அவர் பேசியது தொடர்பாக அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்மையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், 'மன்சூர் அலிகான் இன உணர்வு கொண்ட தமிழன். அவரைப்பற்றி வரும் செய்திகள் மனதுக்கு கஷ்டமாக உள்ளது' என்றும், 'ஆனால் அவர் த்ரிஷா குறித்து பேசிய விவகாரம் பற்றி நான் கருத்து தெரிவிக்கமாட்டேன். ஏனென்றால் அவர் என்ன பேசியுள்ளார் என்பதே எனக்கு தெரியாது' என்றும் கூறியுள்ளார். மேலும், 'ஆனால் அவர் யார் மனதையும் புண்படுத்துமாறு பேசக்கூடிய அளவிற்கு மோசமானவர் இல்லை. வேடிக்கையாக பேசக்கூடியவர். அதனால் அவர் பேசியதை இவ்வளவு பெரிய விஷயமாக்க வேண்டுமா? என்று தான் எனக்கு தோன்றுகிறது' என்று ஆதரவாக பேசியுள்ளார்.