'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங்
செய்தி முன்னோட்டம்
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி பேசியவிதம் "பிரிவினையூட்டும் வெறுப்பு பேச்சுகள்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினை வழிநடத்திய மன்மோகன் சிங், சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது எதிர்க்கட்சியையோ குறிவைத்து இதுபோன்ற "வெறுக்கத்தக்க, நாகரிகமற்ற மற்றும் முரட்டுத்தனமான சொற்களை எந்த முந்தைய பிரதமரும் பயன்படுத்தவில்லை" என்று கூறினார்.
மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு எழுதிய கடிதத்தில், "பொது சொற்பொழிவின் கண்ணியத்தை குறைத்த முதல் பிரதமர் மோடி" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2024 தேர்தல்
பஞ்சாப் மாநிலத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
பஞ்சாபில் உள்ள அனைத்து 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில், இறுதிக் கட்டப் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தின் கடைசி நாளில் இருந்தபோது, மன்மோகன் சிங் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ராஜஸ்தானில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, 2006ஆம் ஆண்டின் போது, நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை இருக்க வேண்டும் என்று சிங் கூறியதாக பிரதமர் குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து பதிலளித்த மன்மோகன் சிங் "என் வாழ்நாளில் நான் ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்தை வேறுபடுத்திக் காட்டியதில்லை. இது பாஜகவின் பழக்கம்" என்று அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பாஜகவை கடுமையாக சாடினார் மன்மோகன் சிங்
மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஆளும் பாஜகவை கடுமையாக சாடினார்.
"பணமதிப்பு நீக்கம், தவறாக நிர்வகிக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் மோசமான நிர்வாகம் ... தொற்றுநோய்களின் போது மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளன. சராசரியாக 6-7% ஜிடிபி வளர்ச்சி சாதாரணமாகிவிட்டது. பிஜேபி அரசாங்கத்தின் ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 6% க்கும் குறைவாக குறைந்துள்ளது. காங்கிரஸ்-யுபிஏ ஆட்சியின் போது இது 8% ஆக இருந்தது," என்று அவர் கூறினார்.
"பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் குடும்ப சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.