பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
செய்தி முன்னோட்டம்
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை கட்டுக்குள் கொண்டுவந்து, பழங்காலத்தில் உபயோகப்டுத்திய துணிப்பைகளை மீண்டும் அதிகளவில் மக்கள் பயன்படுத்த கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் மஞ்சப்பை என்னும் திட்டத்தினை கொண்டுவந்தார்.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பாகமாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த இயந்திரம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் முதன் முறையாக நிறுவப்பட்டதாகும்.
தானியங்கி இயந்திரம்
பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க திட்டம்
இதனையடுத்து இதே போல் மேலும் 5 தானியங்கி இயந்திரங்கள் சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் வைக்கப்படவுள்ளது.
புதிதாக வைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி இயந்திரதிக்குள் ரூ.10 நாணயம் போட்டால் ஒரு மஞ்சப்பை வழங்கப்படும்.
இதில் ரூ.10 ரூபாய் நோட்டும் செலுத்தி பைகளை பெறலாம்.
அதே போல் தேவைக்கேற்ப ரூ.50, ரூ,100 செலுத்தியும் அதற்குரிய எண்ணிக்கையிலான பைகளை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த இயந்திரத்தில் க்யூ-ஆர் கோட் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே மேலும் 5 தானியங்கி இயந்திரங்கள் கோவை மாநகராட்சியில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.