மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் பாரத ராஷ்டிர சமிதியின் முன்னாள் ஆடிட்டர் புட்சி பாபு, அர்ஜுன் பாண்டே மற்றும் அமந்தீப் தால் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களைப் பற்றி சிபிஐ மேலும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், இந்த வழக்கின் சாட்சியான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை 9 மணி நேரம் சிபிஐ விசாரித்தது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் பிஆர்எஸ் தலைவருமான கவிதாவையும் இந்த வழக்கில் சிபிஐ விசாரித்திருக்கிறது.
details
ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை: கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை வழக்கை "புனையப்பட்டது" என்று கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சியாக மாறியுள்ளது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களையும், எங்கள் நல்ல வளர்ச்சிப் பணிகளையும் களங்கப்படுத்தவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்." என்று கூறினார்.
சிசோடியாவும் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும், தனக்கு எதிராக சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று தனது ஜாமீன் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஆறு மாதங்களுக்கு முன், டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்கு பிறகு மணீஷ் சிசோடியா மீது FIR பதிவு செய்யப்பட்டது.