மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம்
மணிப்பூரில் வாழும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு கைப்பற்றத் தொடங்கியுள்ளது. மணிப்பூரில் நடக்கும் இன மோதல்களுக்கு, மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உதவி செய்வதாக கூறப்படுகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறி, மணிப்பூரில் வசிப்பவர்களின் பயோமெட்ரிக் தரவுகள் செப்டம்பர் இறுதிக்குள் கைப்பற்றப்படும் என்று மணிப்பூர் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் தரவுகளை கைப்பற்றுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
2 நாட்களில் இந்தியாவுக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டினர்
"மணிப்பூரில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேற்றவாசிகளின் பயோமெட்ரிக் தரவுகளும் வெற்றிகரமாக கைப்பற்றப்படும் வரை அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் தொடரும். செப்டம்பர் 2023க்குள் இதை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக இனக்கலவரம் நடந்து வருகிறது. இதற்கிடையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக மணிப்பூர் வழியாக இந்தியாவிற்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை-22 மற்றும் 23ஆம் தேதிகளில் மட்டும் மியான்மரை சேர்ந்த 718 பேர் சரியான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்று அசாம் ரைபிள்ஸ் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.