மணிப்பூர்: உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி
மணிப்பூர் முழுவதும் இனக்கலவரம் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் கக்சிங் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட மற்றொரு பயங்கரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் மே 28ஆம் தேதி அதிகாலை, கக்சிங் மாவட்டத்தின் செரோவ் கிராமத்தில் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. செரோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு வழக்கின்படி, மே 28ஆம் தேதி ஆயுதமேந்திய ஒரு கும்பல் 80 வயது மதிக்கத்தக்க இபெடோம்பி என்ற பெண்ணை, அவரது வீட்டிற்குள் அடைத்து வீட்டை தீ வைத்து எரித்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர் எஸ்.சுராசந்த் சிங் ஒரு சுதந்திர போராளி ஆவார்.
'என்னை கூட்டி செல்ல திரும்பி வாருங்கள்': உயிரிழந்தவரின் கடைசி வார்த்தைகள்
சுராசந்த் சிங், 80-வயதில் காலமாவதற்கு முன், சுதந்திர போராட்டத்தில் தனது பங்களிப்பிற்காக முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். அவரது மனைவி இபெடோம்பிக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து அவர்களது பேரன் பிரேம்காந்தா NDTV செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டிருந்ததால் இபெடோம்பியின் குடும்பத்தார் அந்த பகுதியை விட்டு முதலில் தப்பி ஓடிவிட்டனர். "நாங்கள் தாக்குதலுக்கு உள்ளானபோது, என் பாட்டி எங்களை தப்பி ஓடச் சொன்னார். சிறிது நேரம் கழித்து அவர்களை மீட்க திரும்பி வர வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். 'என்னை கூட்டி செல்ல திரும்பி வாருங்கள்,' என்பது தான் அவரது கடைசி வார்த்தைகளாக இருந்தது." என்று அவரது பேரன் பிரேம்காந்தா கூறியுள்ளார்.