டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு
டெல்லியின் ஓக்லாவில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பாதாள சாக்கடையில் மூழ்கி 60 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும், டெல்லியில் மழைநீர் பள்ளத்தில் இருந்து இரண்டு சிறுவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் பிற்பகல் 2:30 மணியளவில் நடந்துள்ளது. சிராஸ்பூர் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இரண்டு சிறுவர்கள் மழைநீரில் விளையாட சென்றுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். "சம்பவ இடத்திற்கு சென்றபோது, மெட்ரோ அருகே உள்ள சுரங்கப்பாதையில் கிட்டத்தட்ட 2.5-3 அடி தண்ணீர் நிரம்பியிருப்பது தெரிந்தது. தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி உடல்களை மீட்டனர். இரண்டு சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று டெல்லி போலீஸ் கூறியுள்ளது.
லெப்டினன்ட் கவர்னர் நேரில் சென்று ஆய்வு
சிராஸ்பூர் பகுதியில் உள்ள பள்ளத்தில் சுமார் 2.5 அடி ஆழத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. "சிஆர்பிசி பிரிவு 174 இன் கீழ் விசாரணை நடந்து வருகிறது" என்று போலீசார் தெரிவித்தனர். நேற்றிரவு முதல் டெல்லியில் இடைவிடாத இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மொத்தம் 228.1 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா இன்று ஆய்வு நடத்தினார். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க வடிகால்களில் தூர்வாருவதை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சக்சேனா உத்தரவிட்டார்.