பங்களாதேஷ் அகதிகளுக்கு மேற்கு வங்கம் அடைக்கலம் தரும் என்று அறிவித்தார் மம்தா பானர்ஜி
செய்தி முன்னோட்டம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து மக்கள் எங்கள் கதவைத் தட்டினால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தெரிவித்தார்.
"பங்களாதேஷ் வேறு நாடு என்பதால் என்னால் எதுவும் பேச முடியாது. இந்திய அரசு அதைப் பற்றி பேசும். ஆனால் ஆதரவற்ற மக்கள்(வங்காளதேசத்தில் இருந்து) மேற்கு வங்காளத்தின் கதவைத் தட்டினால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம். அண்டை நாடுகள் அகதிகளை மதிக்கவும் என்ற ஐ.நா.வின் தீர்மானம் நம்மிடம் உள்ளது. " என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்
இந்தியா
பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை
கொல்கத்தாவில் கனமழைக்கு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸின் மெகா 'தியாகிகள் தின' பேரணி நடைபெற்று வருகிறது.
அந்த பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி இதை தெரிவித்துள்ளார்.
"வன்முறையால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷில் உறவினர்கள் சிக்கித் தவிக்கும் மேற்கு வங்காளவாசிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் நான் உறுதியளிக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
பங்களாதேஷ் அதிகாரிகள் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் டாக்காவின் சில பகுதிகளில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பங்களாதேஷில் நடந்த வன்முறை போராட்டங்களில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அரசாங்க வேலைகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக நாட்டின் சில பகுதிகளில் வன்முறை வெடித்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.