நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்
கடந்த 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் சீனாவில் 'பிஎப் 7' என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வீரியத்தோடு பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து உலக நாடுகளுக்கும் இந்த நோய் தொற்று பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாசல் தடுப்பூசிக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து முதற்கட்டமாக தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
தடுப்பூசியை இலவசமாக வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை
இதனை தொடர்ந்து, பூஸ்டர் டோஸை 'ஹோமோலோகஸ் பூஸ்ட்டிங்', 'ஹெட்ரோலோகஸ் பூஸ்ட்டிங்' என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணைக்கும் ஒரே தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு 'ஹோமோலோகஸ் பூஸ்ட்டிங்' என்னும் தடுப்பூசி போடப்படுகிறது. இதனையடுத்து இரண்டு தவணைக்கும் வெவ்வேறு தடுப்பூசி போட்டவர்களுக்கு 'ஹெட்ரோலோகஸ் பூஸ்ட்டிங்' என்னும் தடுப்பூசி போடப்படுகிறது. இதில் 'ஹெட்ரோலோகஸ் பூஸ்ட்டிங்' பதில் நாசல் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறுகையில், தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமரிடம் பேசவுள்ளதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.