அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு சொத்துக்களை நிர்வகித்து பராமரிக்கும் துறையான எஸ்டேட் இயக்குநரகம், அரசு ஒதுக்கிய பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ராவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக(எம்பி) இருந்த அவருக்கு அந்த பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு பணப்பட்டுவாடா ஊழல் பிரச்சனையால் மக்களவையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதால், எம்பி பதவிக்காக அவ்ருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவை காலி செய்யும்படி அரசாங்கம் அவரிடம் கேட்டுக் கொண்டது. மொய்த்ராவிடம் உடனடியாக வீட்டை காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பங்களாவை அவர் "விரைவில் காலி செய்யவதை" உறுதி செய்ய ஒரு குழு அனுப்பப்படும் என்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் கூறியுள்ளது.
எம்பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கப்பட்டதற்கான காரணம்?
"செவ்வாய்கிழமையன்று அவருக்கு(மொய்த்ரா) வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதால், அரசு பங்களா விரைவில் காலி செய்யப்படுவதை உறுதிசெய்ய எஸ்டேட் இயக்குநரகத்தின் அதிகாரிகள் குழு அனுப்பப்படும்" என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவு பாஸ்வோர்டுகளை எம்பி மஹுவா மொய்த்ரா பகிர்ந்து கொண்டதாகவும், அதனால் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த காரணங்களுக்காக அவர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி பதவி நீக்கப்பட்டார்.